தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 29 April 2022 7:10 PM GMT (Updated: 29 April 2022 7:10 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 63 மற்றும் 64 பகுதி உட்பட்ட எல். ஐ.சி‌. காலனி, கே.கே.நகர், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காலை மற்றும் மாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.கேநகர், திருச்சி. 

ரெயில்வே மேம்பாலம் வேண்டும்
திருச்சி கே.கே.நகர், உடையான்பட்டி சாலையில் ரெயில்வே கேட் செயல்பட்டு வருகிறது. இதனை தாண்டி அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் தற்போது வர தொடங்கியுள்ளன. மேலும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலை நேரங்களில் ரெயில்வே கேட் போடப்படுவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தரப்படுமா? என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உடையான்பட்டி, திருச்சி.


தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
திருச்சி மாநகராட்சி பழைய 35-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ்கார்டன் ரன்வேநகரில் 12-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த குடியிருப்பு பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் குடியிருப்பை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் விஷ ஜந்துக்களும் அவ்வப்போது வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதற்கு அஞ்சி, இரவு நேரங்களில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாரும் வெளியே நடமாட முடிவதில்லை. எனவே இந்த ரன்வே நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
லட்சுமிபதி, ரன்வேநகர், திருச்சி.


சாலையில் பள்ளம் 
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா திண்டுக்கல்-திருச்சி பஸ் நிலையம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.

Next Story