ஆன்லைன் மூலம் மோசடி: ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்


ஆன்லைன் மூலம் மோசடி: ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 29 April 2022 7:36 PM GMT (Updated: 29 April 2022 7:36 PM GMT)

ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

புதுக்கோட்டை, 
குறுஞ்செய்தி
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது செல்போன் எண்ணுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அனுப்பியதை போல் போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை உண்மையான என நம்பி குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு மற்றும் ரகசிய குறியீடு எண்ணை உள்ளீடு செய்துள்ளார். இதில் இருந்து மர்ம ஆசாமிகள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துவிட்டனர்.
பணம் மோசடி செய்தது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம ஆசாமியின் வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரித்தனர்.
ரூ.98 ஆயிரம் மீட்பு
போலீசாரின் விசாரணையில் அந்த எண்ணில் இருந்து ஆன்லைன் நிறுவனத்தில் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பல ஆர்டர் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆன்லைன் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை முடக்கம் செய்தனர். மேலும் ரூ.98 ஆயிரத்தை மீட்டனர். அந்த பணத்தை பாதிக்கப்பட்ட பிரபாகரனின் வங்கி கணக்கில் செலுத்தினர். மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை பிரபாகரனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம்,  இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
தொலைபேசி எண்
ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 909-ஐ புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் பதட்டம் அடையாமல் உதவி மைய தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கும் பட்சத்தில் உடனடியாக எதிரியின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவரின் இழந்த பணம் மீட்கப்படும் எனவும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக காவல் நிலையத்திற்கு வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளம் மூலமாக புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story