அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
x
தினத்தந்தி 30 April 2022 1:25 AM IST (Updated: 30 April 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள சண்முகசுந்தரம், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிவித்தார்.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள சண்முகசுந்தரம், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் நீக்கம் 
விருதுநகர் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளராகவும், அக்கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர், ஆர்.எம்.சண்முகசுந்தரம். 
இவர் 1994 முதல் கட்சி தொடங்கியதில் இருந்து ம.தி.மு.க. விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் அதன் பின்னர் தற்போது கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகியாக நியமனம் செய்ததற்கு இவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கலிங்கப்பட்டியில் நடந்த விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இவர் தொடர்ந்து கிழக்கு மாவட்ட செயலாளராக நீடித்து வந்தார்.
இதற்கிடையில் இவர் மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் துரை வைகோ நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தனர்
இந்நிலையில் நேற்று ஆர்.எம்.சண்முகசுந்தரம், ம.தி.மு.க.வின் உயர்நிலை குழு உறுப்பினர் பொறுப்பு மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்தது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை 
இதுபற்றி  சண்முகசுந்தரம் கூறியதாவது:-
நான் கடந்த 28 ஆண்டுகளாக ம.தி.மு.க. மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறேன். பொதுச்செயலாளர் வைகோ முன்பு பேசுகையில், அண்ணாவின் மீது ஆணையாக துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வர மாட்டேன் என்று எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி துரை வைகோவை தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்தார். இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம்.
 அதற்காக தற்போது பதவி நீக்கம் செய்துள்ளார். இது பற்றி எழுத்து பூர்வமான தகவல் கிடைத்தவுடன், என்னைப் போல் நடவடிக்கைக்கு ஆளான மற்ற இருவருடன் கலந்து பேசி, சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story