குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரின் ஜாமீன் ரத்து


குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரின் ஜாமீன் ரத்து
x
தினத்தந்தி 29 April 2022 8:01 PM GMT (Updated: 29 April 2022 8:01 PM GMT)

கும்பகோணம் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரின் ஜாமீனை  ரத்து செய்து அவர்களை சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டு உள்ளார். 
நன்னடத்தை ஜாமீன்
கும்பகோணம் பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 41). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் 
போலீசார் அவரை கும்பகோணம் கோட்டாட்சியர்  லதா முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர். அப்போது அலெக்சாண்டரிடம் விசாரணை செய்த கோட்டாட்சியர் லதா அவருக்கு ஓராண்டு நன்னடத்தை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 
இதனால் வெளியில் இருந்து வந்த அலெக்சாண்டா் கடந்த 10-ந் தேதி கும்பகோணம் பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்த சுமதி ராஜ்குமார் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் ரத்து
இதைத்தொடர்ந்து அவர் கோட்டாட்சியரின் விசாரணைக்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து கும்பகோணத்துக்கு அழைத்து வரப்பட்டார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கோட்டாட்சியர் லதா,  அலெக்சாண்டரிடம் இறுதி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் அலெக்சாண்டருக்கு வழங்கப்பட்டிருந்த நன்னடத்தை ஜாமீனை ரத்து செய்த கோட்டாட்சியர் லதா, ஓராண்டு காலத்தில் வெளியில் இருந்த நாட்கள் போக மீதி உள்ள 206 நாட்கள் அலெக்சாண்டரை சிறையில் வைக்க  உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அலெக்சாண்டரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைப்பு
 சுவாமிமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருவலஞ்சுழி அம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு  நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் சுரேசை ஓராண்டு நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க கோட்டாட்சியர் லதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வெளியில் இருந்து வந்த சுரேஷ் கடந்த மாதம் திருவலஞ்சுழி டாஸ்மாக் அருகே அய்யப்பன் என்பவரை தாக்கி அவரது செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது மற்றும் திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோவில் அருகே கேரள மாநில சாய்பாபா பக்தர் ஒருவரை தாக்கியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சுவாமிமலை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
வழிப்பறி
இது தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியர் லதா விசாரணை நடத்தினார். விசாரணையில் நன்னடத்தை ஜாமீன் காலத்தில் சுரேஷ் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது நன்னடத்தை பிணையை ரத்து செய்து பிணை காலத்தில் வெளியில் இருந்த நாட்களை தவிர்த்து மீதி உள்ள 209 நாட்கள் சுரேசை சிறையில் அடைக்க கோட்டாட்சியர் லதா உத்தரவிட்டார். 

Next Story