இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் கைது


இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 April 2022 8:19 PM GMT (Updated: 2022-04-30T01:49:24+05:30)

தஞ்சை அருகே காட்டு பகுதிக்கு கடத்திச்சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்த முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வல்லம்;
தஞ்சை அருகே காட்டு பகுதிக்கு கடத்திச்சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்த முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தஞ்சை புதிய பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு
அப்போது தஞ்சை அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடி என்கிற கொடியரசன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். கொடியரசனும் அந்த பெண்ணும் அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த பெண்ணின் அருகில் சென்று கொடியரசன் அவரை வழிமறித்து பேசியுள்ளார். தனக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால் இளம் பெண்ணும் அவருடன் பேசி உள்ளார். 
அப்போது கொடியரசன் அந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் ஏறுமாறும், வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டு கொடியரசன் மோட்டார் சைக்கிளில் வருமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் வேறு வழியின்றி கொடியரசனின் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.
காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றார்
அந்த பெண்ணை கொடியரசன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார். தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் கொடியரசன் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப் பட்டியை தாண்டிய கொடியரசன், மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதிக்கு திருப்பியுள்ளார். 
இதனால் பயந்துபோன அந்தபெண் சத்தம் போட்டுள்ளார். இரவு நேரம் என்பதாலும், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதாலும் அந்த பெண் போட்ட சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனையடுத்து கொடியரசன் வலுக்கட்டாயமாக அங்குள்ள முந்திரி காட்டுக்கு இளம்பெண்ணை கடத்திச்சென்று உள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
அங்கு சென்றதும் கொடியரசன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுகுமார், கண்ணன், சாமிநாதன் ஆகிய 3 பேரை முந்திரி காட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர்களை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அந்த பெண் அஞ்சி நடுங்கி உள்ளார். இதனையடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். 
ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து ஓட முயன்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 4 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த பெண் கதறி உள்ளார். நள்ளிரவு வரை 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
பெற்றோரிடம் கதறல்
நள்ளிரவில் அந்த பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறும், இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று 4 பேரும் சேர்ந்து மிரட்டி அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு அந்த பெண்ணிடம் கூறி உள்ளனர்.
போலீசில் புகார்
இந்த நிலையில் அந்த பெண் போலீசில் புகார் அளிக்க உள்ளதை அறிந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் பஞ்சாயத்து செய்ததாக தெரிகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் இந்த சம்பவத்தில் தாடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
4 வாலிபர்கள் பிடிபட்டனர்
இதனையடுத்து தனிப்படை போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் வாங்கி அதை பதிவு செய்தனர். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீசார், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தலைமறைவாக இருந்த கொடியரசன், சுகுமார், சாமிநாதன், கண்ணன் ஆகிய 4 பேரை பிடித்து வல்லம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். 
அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது கற்பழிப்பு, மிரட்டல் விடுத்தல், சாதியை சொல்லி திட்டுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு அழைத்து வந்தனர்
இந்த நிலையில் இளம்பெண் போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதற்காக பணம் தருவதாக பஞ்சாயத்து பேசியது தொடர்பாக தஞ்சை அருகே உள்ள குருங்குளம் மேற்கு மேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை, தமிழரசன் ஆகிய மூவரையும் வல்லம் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு அழைத்து வந்த முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 3 பேருக்கும் ஆதரவாக மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர்  போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீஸ் நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷமிட்டனர். 
தீக்குளிக்க போவதாக மிரட்டல்
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வேலுசாமி உள்பட 3 பேருக்கும் ஆதரவாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தஞ்சை தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
இதனையடுத்து தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் வல்லம் போலீஸ் நிலையம் வந்த அதிரடிப்படை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 7 பேரை வேனில் ஏற்றி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 7 பேரும் கைது
இந்த நிலையில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கொடியரசன்(வயது 25), சுகுமார்(28), சாமிநாதன்(30), கண்ணன்(27) ஆகியோரை கைது செய்தனர்.
மலும் நடந்த சம்பவங்களை மறைக்க பஞ்சாயத்து பேசியதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வேலுசாமி(60), மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்லதுரை(40), தமிழரசன்(30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story