ரேஷன் பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைக்கும் மலைவாழ் மக்கள்


ரேஷன் பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைக்கும் மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 29 April 2022 8:34 PM GMT (Updated: 29 April 2022 8:34 PM GMT)

பாபநாசம் அருகே, ரேஷன் பொருட்கள் வாங்க மலைவாழ் மக்கள் உயிரை பணயம் வைத்து காட்டில் நடந்தும், படகில் அணையை கடந்தும் 14 கிலோ மீட்டர் தூரம் திகில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அருகே, ரேஷன் பொருட்கள் வாங்க மலைவாழ் மக்கள் உயிரை பணயம் வைத்து காட்டில் நடந்தும், படகில் அணையை கடந்தும் 14 கிலோ மீட்டர் தூரம் திகில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

மலைவாழ் மக்கள்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிக்குழி, சேர்வலாறு, அகஸ்தியர் காணி, பெரிய மைலார், சின்ன மைலார் ஆகிய இடங்களில் காணி பழங்குடி மலைவாழ் மக்கள் பூர்வ குடிகளாக 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இதில் இஞ்சிக்குழியில் வசிக்கும் காணி மக்களின் அன்றாட வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. பிற காணி நிலங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் வனத்துறை தொடர்பு வசதிகள் உள்ளன. ஆனால் இஞ்சிக்குழி பகுதி காரையார் அணையை தாண்டி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்காட்டுக்குள் அமைந்துள்ளது.

வாழ்க்கை போராட்டம்

வேறு ஆட்கள் நடமாட்டமும், எந்தவித தொலைத்தொடர்பு வசதியும் இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேல் மலைவாழ் காணி மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இஞ்சிக்குழியில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். இந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது.

அங்கிருந்து அடர்ந்த காடுகளை தாண்டி, வனவிலங்குகளின் ஆபத்தையும் மீறி, 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து காரையார் அணையை அடைய வேண்டும். இந்த 10 கிலோ மீட்டர் தூரத்தை விட காரையார் அணையை கடப்பது என்பது தான் இம்மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ரேஷன் பொருட்கள்

இருப்பினும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக இஞ்சி க்குழி காணி மக்கள் மாதத்தில் 2 முறை மிக சிரமப்பட்டு கீழே வந்து செல்கின்றனர். இதற்காக அந்த மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட காரையாறு அணையை கடப்பதற்கு வனத்துறை சார்பில் படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், படகில் பயணம் செய்ய   டீசல் வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.

படகில் செல்லாமல் அணையை சுற்றி கீழே வர வேண்டும் என்றால் கூடுதலாக 10 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். எனவே மூங்கில் கம்புகளை கொண்டு சங்காடம் கட்டி (அணையில் மிதந்து வர படகுபோல பயன்படுத்தப்படுவது) பெண்கள், குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். முதலைகள் உள்ள இந்த அணையில் படகில் செல்வது என்பதே மிக மிக ஆபத்து தான். ஆனால், காணி மக்கள் தற்போது மூங்கில் கம்புகளால் ஆன சங்காடத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து கடந்து செல்கின்றனர்.

திகில் பயணம்

ரேஷன்பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் மாதத்தில் 6 நாட்கள் செலவு செய்தாக வேண்டும். மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் இவர்களுக்கு காரையார் அணை அருகே உள்ள கடையில் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

இதற்காக வெள்ளிக்கிழமை தங்கள் பயணத்தை தொடங்க வேண்டும். அன்று காலை நடக்க ஆரம்பித்தால் மாலை 3 மணியளவில் அணையை வந்து சேர்வார்கள். பின்னர் அங்கிருந்து தாங்கள் கட்டி வைத்துள்ள மூங்கில் சங்காடத்தை எடுத்துக்கொண்டு சுமார் 2 மணிநேரம் அணையை கடந்து கீழே உள்ள சின்ன மைலாருக்கு வந்து சேர்வார்கள். அங்கு தங்கள் உறவினர்கள் இல்லத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ரேஷன் பொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பிற பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அன்று இரவு மைலாரில் தங்கிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் இல்லத்தை நோக்கி பயணத்தை தொடங்குவார்கள். 6 நாட்கள் காட்டில் திகில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் வெளியூர்களில் விடுதிகளில் தங்கித்தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை எடுப்பார்களா?

இதுகுறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அபிநயா கூறுகையில், “நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக மாதத்தில் 2 முறை கீழே வருவோம். எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.

எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இலவசமாக படகில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

Next Story