அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்


அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்
x
தினத்தந்தி 30 April 2022 2:12 AM IST (Updated: 30 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:-
அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தீத்தடுப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கலெக்டர் கார்மேகம் சென்றார். பின்னர் அவர் தீத்தடுப்பு உபகரணங்கள் இருக்கும் அறைகள், நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீத்தடுப்பு கட்டமைப்புகள் குறித்தும், அங்குள்ள மின் இணைப்புகள் மற்றும் மின்சார உபகரணங்கள் ஆகியவற்றின் தீத்தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் இன்று (நேற்று) தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யப்பட்டது.
நிவர்த்தி செய்யப்படும்
இதில் ஏதேனும் தீத்தடுப்பு குறைகள் இருந்தால் அதனை 48 மணி நேரத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தீத்தடுப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தனி நீர்த்தேக்க தொட்டியும், அனைத்து மருத்துவ பிரிவு கட்டிடங்களுக்கும் நீர் உந்த ஏதுவாக தனி மின்மோட்டார் கட்டமைப்பும், கூடுதலாக டீசல் என்ஜின் மூலம் இயங்கும் மின் மோட்டார் கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. நாளை (இன்று) நடைபெறும் கொரோனா மெகா சிறப்பு முகாமில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, தாசில்தார் செம்மலை, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (மின் பிரிவு) சக்திவேல், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், சரவணன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story