துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 30 April 2022 2:13 AM IST (Updated: 30 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டி அருகே நடந்த ஜல்லிக்கட்டுவில் துள்ளிக்குதித்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினார்கள். மேலும் மாடு முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி:-
தம்மம்பட்டி அருகே நடந்த ஜல்லிக்கட்டுவில் துள்ளிக்குதித்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினார்கள். மேலும் மாடு முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பாம்பலம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதன்படி உலிபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, திருச்சி, லால்குடி, மதுரை என பல்வேறு இடங்களில் இருந்து 423 காளைகள் கலந்து கொண்டன. மேலும் தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் 450 பேர் பங்கேற்றனர்.
மல்லுக்கட்டிய வீரர்கள்
முதலில் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 
கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டுக்கொண்டு மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். துள்ளிக்குதித்து ஓடிய காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினார்கள்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதனால் உற்சாகமடைந்த மாடுபிடி வீரர்கள் ஏராளமான காளைகளை அடக்கினர். மேலும் பார்வையாளர்களும் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
30 பேர் காயம்
வேகமாக ஓடிவந்த மாடுகள் முட்டியதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 இதையொட்டி வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசாமி உள்பட துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Next Story