சட்டக்கல்லூரி மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை
சக மாணவிகள் கிண்டல் அடித்ததால் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு,
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாயி. இவரது மகள் கவிப்பிரியா (வயது 19). இவர் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்ற மாணவியை சக சட்டக்கல்லூரி மாணவிகள் கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக தெரிகிறது.
இதை சகித்துக்கொள்ள முடியாமல் தனது தந்தைக்கு தொலைபேசியில் கூறிவிட்டு ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அவரை சக மாணவிகள் ஓரிரு நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வை முடிந்த விட்டு ஊருக்கு செல்லலாம் என சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கவிப்பிரியா விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சக மாணவிகள் கவிப்பிரியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவிப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story