சோதனை முயற்சிக்கு பலன்: அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் தொடரும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் தொடரும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக அண்ணாசாலை-திரு.வி.க. சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க. சாலையில் வலது புறம் சென்று ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை செல்லும் வகையிலும், அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை-திரு.வி.க.சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்த போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால் 30-ந்தேதி (இன்று) முதல் ஆனந்த் திரையரங்கம் முன்பாக உள்ள ‘சென்டர் மீடியன்’ வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சேர்த்து அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அண்ணாசாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம். மேலும் அண்ணாசாலை வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து நேராக பாட்டா பாயிண்ட் செல்வதற்கு அனுமதிக்காமலும், மேலும் வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக இடதுபுறம் திரும்பி அண்ணாசாலை பாட்டா பாயிண்டில் இலகு ரக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் ‘யு டர்ன்’ எடுக்கலாம் அல்லது நேராக ஸ்பென்சர் சென்றடையும் வகையிலும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால் 30-ந்தேதி (இன்று) முதல் தபால் அலுவலகம் அருகே உள்ள சென்டர் மீடியன் திறப்பு வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சேர்த்து அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story