தேசிய அளவிலான கண்காட்சி
கடலூர் புனித வளனார் கல்லூரியில் தேசிய அளவிலான கண்காட்சி நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் மற்றும் கண்காட்சியும், மாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கினார். முதல்வர் அருமைசெல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சிற்றம்பலம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் வில்லியம், புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி அனந்து, தனியார் நிறுவன துணை தலைவர் சத்யசீலன் கங்காசலம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து அனைவரும், மாணவர்கள் தயாரித்து கண்காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை பார்வையிட்டனர்.
இந்த கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் 20 கல்லூரிகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முனைவர்கள் பெஞ்சமின் ரொசாரியோ, விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் சவரிமுத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story