தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று செய்திகள் கண்காட்சி


தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று செய்திகள் கண்காட்சி
x
தினத்தந்தி 30 April 2022 10:13 PM IST (Updated: 30 April 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’யில் வெளிவந்த தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று செய்திகள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்

வேதாரண்யம்:
‘தினத்தந்தி’யில் வெளிவந்த தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று செய்திகள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
உப்பு சத்யாகிரக போராட்டம்
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் உப்புக்கு வரி விதித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி தண்டி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று உப்பு சத்யாகிரக போராட்டத்தை நடத்தினார். 
இதேபோல 1930-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி ராஜாஜி தலைமையில் விடுதலை போராட்ட வீரர்கள் ஒன்றிணைந்து திருச்சியில் இருந்து வேதாரண்யத்திற்கு பாதயாத்திரையாக வந்து உப்பு அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பு அள்ளும் நிகழ்ச்சி
இந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். உப்பு சத்யாகிரக போராட்ட 75-ம் ஆண்டு பவள விழாவையொட்டி முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு தலைமையில் தியாகிகள் திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக வேதாரண்யத்திற்கு வந்தனர். 
இதனைத்தொடர்ந்து அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு உப்பு  அள்ளினார்.  
சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு
75-வது ஆண்டு சுதந்திரதின விழாவையொட்டி தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘தினத்தந்தி’ நாளிதழில் 75 நாட்களாக தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு வெளிவந்தது.
நேற்று நடந்த உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளிவந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று செய்திகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். ஒரு சிலர் அதன் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்து சென்றனர்.
இந்த கண்காட்சியை ஆசிரியர் சித்திரவேலு மற்றும் நீலமேகம் ஆகியோர் வைத்திருந்தனர்.

Next Story