குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றம்
கடலூரில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
கடலூர்,
கடலூர் எஸ்.என்.சாவடி சின்னப்பொண்ணு நகரில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையை ஆக்கிரமித்து அதே பகுதியை சேர்ந்த சுமார் 11 குடும்பத்தினர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதுபற்றி அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 11 குடும்பத்தினருக்கும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அந்த 11 வீடுகளிலும் வசித்து வந்த பொதுமக்கள் தாங்களே முன்வந்து வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளை காலி செய்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதற்காக கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மாநகராட்சி பொறியாளர் (பொறுப்பு) மகாதேவன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் 2 பொக்லைன் எந்திரத்துடன் அப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 வீடுகளையும் இடித்து அகற்றினர். அப்போது அங்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டா் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story