காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 April 2022 10:58 PM IST (Updated: 30 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
ஜவுளி வியாபாரி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொம்மஅள்ளி ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நாகராஜ் வீட்டை பூட்டி விட்டு  குடும்பத்தினருடன் சென்னையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தங்கி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை நாகராஜின் வீட்டு கதவு திறந்து இருந்தது. இதை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து காரிமங்கலம் போலீசாருக்கும், நாகராஜிக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், போலீசார் மற்றும் நாகராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. 
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story