ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேங்காய் விலை வீழ்ச்சியால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்
தேங்காய் விலை வீழ்ச்சியால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்காய் விலை வீழ்ச்சி
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னை விவசாயத்திற்கு உரம், பூச்சி மருந்து, போன்ற மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், தேங்காய் விலை குறைந்து வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிப்படைவதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தென்னை விவசாயி அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:-
பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு டன் தேங்காய் ரூ. 38 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.25 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் சமீபகாலமாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், நோய் தாக்குதல், போன்ற பிரச்சினைகளால், தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கு வேளாண் விஞ்ஞானிகள் குழு ஏற்படுத்தப்பட்டு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
ரேஷன் கடைகள்
மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரம், இடுபொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.தென்னையை பணப்பயிர் பட்டியலில் சேர்த்துள்ளதால், மாநில அரசின் மானியங்கள் கிடைப்பதில்லை. எனவே தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை கவனித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதே கோரிக்கையை பல்வேறு தென்னை விவசாயிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story