பிரமிக்க வைக்கும் குகை மீன்கள் கண்காட்சி
திருப்பூரில் அனைத்து தரப்பினரையும் பிரமிக்க வைக்கும் குகை மீன்கள் கண்காட்சி
திருப்பூர்
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொழுதுபோக்கு அம்சமாக தியேட்டர்கள் மட்டுமே உள்ளது. சிறுவர்கள் மகிழும் பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அளவில் இல்லை. கோடை விடுமுறை காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு பொழுதுபோக்கும் அம்சமாக பொருட்காட்சி விளங்கி வருகிறது.
குகை மீன்கள் கண்காட்சி
பிரகல்யா விஷன் சார்பில் திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு பொருட்காட்சி தொடங்குகிறது.
இந்த பொருட்காட்சியின் முக்கிய அம்சமாக குகை மீன்கள் கண்காட்சி விளங்கி வருகிறது. பொருட்காட்சிக்குள் நுழைந்ததும் குகை மீன்கள் கண்காட்சி அரங்குக்குள் செல்ல வேண்டும். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த குகைக்குள் கண்ணை கவரும் வகையில் வண்ண, வண்ண மீன் தொட்டிகள் இடம் பெற்றுள்ளன. 80 தொட்டிகளில் விதவிதமான வண்ண மீன்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் கடல் நீர் நிரப்பப்பட்டு வித்தியாசமான மீன்கள் கண்டுகளிக்க வைக்கப்பட்டுள்ளன. ஜெயின் கவுரம் என்ற மீனுக்கு முட்டைகோஸ் மட்டுமே உணவாக கொடுக்கப்படுகிறது.
ராட்சத மீன்கள்
இதுபோல் டைகர் அஸ்கரவ், செல்பினி, வாஸ்து மீன் என்று அழைக்கப்படும் அரவனா, வெள்ளை பிரானா, ஆஸ்கர் பிஷ், ரெட் பிஷ், ஈல் மீன், லிட்டில் பிஷ், வெள்ளை சார்க், பிளாக் சார்க், லையன் பிஷ், டைகர் மவுண்ட் பிஷ் என 80-க்கும் மேற்பட்ட மீன் வகைகளை அனைவரும் கண்டுரசிக்க முடியும். இந்த மீன் தொட்டிகளுக்கு முன்பு நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இதை கடந்து சென்றால் 200 அடி நீளமுள்ள கண்ணாடி குகைக்குள் செல்ல முடியும். அந்த குகையின் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி கண்ணாடியால் ஆனது. ராட்சத அளவிலான மீன்கள் அங்குமிங்கும் நீந்துவதை அருகில் இருந்து பார்த்து அதிசயிக்க வைக்கிறது. வெளிநாடுகளில் தான் இதுபோன்ற குகைக்குள் சென்று மீன்களை பார்த்து வந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் கண்டுகளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மின்னொளியில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துவது கண்களை கவருவதாக உள்ளது. 3 அடி நீளம் வரை பிரானா வகை ராட்சத மீன்கள் தலைக்கு மேல் நீந்துவதை பார்ப்பது பிரமிப்பாக உள்ளது. ரெட் பிஷ், கேட் பிஷ், பிளாக் பிரானா மீன்கள் அதிக அளவில் உள்ளன.
விளையாட்டு அம்சங்கள்
குறிப்பாக அரப்பைனா என்ற வகை மீன்கள் தெற்கு அமெரிக்காவில் நீர்நிலைகளில் காணப்படுகிறது. இந்த மீன் 9 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்த கண்காட்சியில் அந்த வகை மீன்கள் 2½ அடி முதல் 3 அடி நீளம் கொண்டதாக உள்ளன. இவற்றை பார்த்து ரசிப்பதுடன் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து சிறுவர்கள் மகிழ்ந்துள்ளனர்.
சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுனாமி, கொலம்பஸ் போன்ற விளையாட்டுகளும், ஜெயண்ட் வீல் ராட்டினம், ரோலர் கோஸ்டர், பிரேக் டான்ஸ், வாட்டர் போட், பலூன் ரைட், 3டி பேய் வீடு போன்ற 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவரும் உண்டு மகிழும் வகையில் பாப்கார்ன், ஸ்வீட் கான், ஐஸ்கிரீம், டெல்லி அப்பளம் போன்றவை உள்ளன. வீட்டு உபயோக பொருட்கள், பேன்சி பொருட்கள் என 30-க்கும் மேற்பட்ட கடைகளும் இடம்பெற்றுள்ளன. அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வசதியாக அமைந்துள்ளது.
குளிர்சாதன வசதி
இதுகுறித்து பிரகல்யா விஷன் உரிமையாளர் கனகராஜ் கூறும்போது, ‘குகை மீன்கள் கண்காட்சியில் வெளிநாடுகளில் உள்ள மீன்களை அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த குகை மீன்கள் கண்காட்சி சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கவர்ந்து வருகிறது. ஜூன் மாதம் வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story