மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பள்ளிக்கூட மாணவிகள் மோதல்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பள்ளிக்கூட மாணவிகள் மோதி கொண்டனர்.
மதுரை
மதுரை நகரின் முக்கிய பஸ் நிலையமாக பெரியார் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி-கல்லூரி மாணவ,மாணவிகள் அதிகம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது திடீரென 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் இரு கோஷ்டியாக ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பெண்கள் சிலர் சண்டை போட்ட மாணவிகளை விலக்கி விட முயன்றனர். இருப்பினும் குடுமிப்பிடி தகராறு தொடர்ந்தது. அங்கிருந்த பெரியவர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து அவர்களது கைகலப்பு முடிவுக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது அந்த மாணவிகளிடையே கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது அதுதான் நேற்று சண்டையில் முடிந்துள்ளது.
தகவலறிந்து திடீர்நகர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்தான் மோதிக்கொண்டது தெரியவந்தது. எனவே அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story