மானாமதுரை அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுப்பு


மானாமதுரை அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 1 May 2022 1:52 AM IST (Updated: 1 May 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மானாமதுரை,
மானாமதுரை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இரும்பு உருக்காலை எச்சம்
மானாமதுரை அருகே உள்ள மணக்குளம் கிராமத்தில் உள்ள வலையனோடை கண்மாய் பகுதியில் காணப்படும் கற்கள் வித்தியாசமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சமயக்குமார் என்பவர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வரலாற்று ஆர்வலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவரது தகவலின் பேரில் அருப்புக்கோட்டை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். 
அப்போது அங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கண்மாய் பகுதியில் 2 உருக்காலையும், ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், பல துண்டு குழாய்களையும் கண்டுபிடித்தனர். 
இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருக்காலை மற்றும் குழாய்களின் மத்தியில் உள்ள துவாரம் 2 செ.மீ. சுற்றளவு உள்ளது. மேலும் சுடுமண்ணால் ஆன இந்த குழாய்களின் மேற்பரப்பு சிதைவுற்று காணப்படுகிறது. மேலும் இரும்பை உருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காக இக்குழாய்கள் மூலம் காற்றை கொண்டு போக இந்த அமைப்பை முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
ஆதிமனிதர்களின் இருப்பிடம்
மேலும் இந்த பகுதியில் ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகளும், இரும்பு உருக்கு கழிவுகளும், இரும்பு துகள் படிமங்களும் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் இந்த இப்பகுதியில் காணப்படும் செம்பூரான் பாறையில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும், அதை எரியூட்டி உருக்கினால் இரும்பு பொருட்கள் செய்யலாம் என்ற வித்தையை அப்போது வாழ்ந்த மக்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 
மேலும் பழங்காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை பயன்படுத்தியிருக்கலாம் என தெரிய வருகிறது. 
சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் பாறைகளில் இருந்த இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து தங்களுக்கு தேவையான இரும்பு பொருட்களை தயாரித்து உள்ளனர் என்பதை அதன் மூலம் அறிய முடிகிறது. எனவே இப்பகுதி ஆதி மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் என தெரிய வருகிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story