சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யும் திட்டம்
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை,
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
சனிக்கிழமையில்..
பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி உள்ளது. இந்த சீர்த்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற திட்டத்தை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை மதுரை யா.ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
87 சதவீதம் வருவாய்
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 4 மாத காலம் கொரோனா காலகட்டமாகவும், ஒரு மாத காலம் வடகிழக்கு பருவமழை காலமாகவும், 2 மாத காலம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஒரு மாத காலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற காலமாகவும் இருந்தது. இந்த வகையான பல்வேறு பணிகளுக்கு இடையில் தமிழகத்தில் வரக்கூடிய அரசின் மொத்த வருவாயில் 87 சதவிகிதம் வருவாய் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப்பட்டுள்ளது. வருவாய் ஈட்டும் துறையாக பதிவுத்துறையும், வணிகவரித்துறையும் இயங்கிக்கொண்டு உள்ளது. பத்திர பதிவுத்துறையின் மூலமாக அரசுக்கு 13 ஆயிரத்து 270 கோடி ரூபாயும், வணிகவரித்துறையின் மூலமாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 70 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டி தரப்பட்டுள்ளது.
முன்னுரிமை
முதல்-அமைச்சர் இந்த துறைகளின் மூலம் இன்னும் 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார். அதற்காக, இந்த துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையெல்லாம் சீர்திருத்தம் செய்து கொண்டு வருகின்றோம். அரசு மற்றும தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் நலன் கருதி சனிக்கிழமையிலும் ஆவணம் பதிவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலான சட்டமுன்வடிவை கவர்னரின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான துறையாகும். இந்த துறை ஏறத்தாழ 150 ஆண்டுகளை கடந்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 576 பத்திரப்பதிவுத்துறை கட்டிடங்களில் 100 கட்டிடங்கள் பழமையான கட்டிடமாகும். இந்த 100 பழமையான பதிவுத்துறை கட்டிடங்களில் 50 கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் ஆவண எழுத்தர்கள்
பொதுமக்களின் நலன் கருதி புதிதாக 20 ஆயிரம் ஆவண எழுத்தர்களை எழுத்துத் தேர்வின் மூலம் நியமனம் செய்வதற்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பத்திரப்பதிவுத்துறையில் பதிவுசெய்து கொள்வது பற்றியும், அரசு எவ்வகையான திட்டங்களை பதிவுத்துறையில் செயல்படுத்தி வருகின்றது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் நலன்கருதி அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பத்திர பதிவு செய்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நில மோசடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றவுடன் நிலத்திற்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிந்து அவர்களிடமே நிலம் ஒப்படைக்கப்படும். மேலும், பதிவுத்துறையில் சனிக்கிழமைகளில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களுக்கு தேவைப்படும் வாரத்திலோ அல்லது மாத இறுதியிலோ ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேஸ்வரி சரவணன், நரசிங்கம் ஆனந்த், காதக்கிணறு செல்வி சேகர், ஆலத்தூர் சரண்யா ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story