‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த மின்கம்பம்
விருதுநகர் கே.ஆர்.கார்டன்பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனை ஆய்வு செய்து விபரீதம் நிகழும் முன்பு இந்த கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது பஞ்சாயத்திற்குட்பட்ட மேலப்பனையூர் கிராமத்தில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேலப்பனையூர்.
தொடர் மின்வெட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான், சாக்கோட்டை, புதுவயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வணிகர்களின் தொழில்வளங்களும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஐயப்பன், சாக்கோட்டை.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன்கோவில் கிழமேல் பகுதி சர்ச் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பஞ்சர் ஆகின்றது. எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தியசேனை, அருப்புக்கோட்டை.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி 25-வது வார்டு பீ.பீ.குளம் பகுதியில் பன்னியான்மாயாண்டி தெருவில் உள்ள தெருவிளக்கு சில சமயங்களில் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால்பாண்டி, மதுரை.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள், வாகனங்கள் மீது மோதுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமா, திருப்பத்தூர்.
பழைய இடத்தில் தபால்நிைலயம் செயல்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த துணை தபால் நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தபால் சேவையை நம்பி உள்ள பலரும் நெடுந்தொலைவிலுள்ள தபால் நிலையம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே தபால் நிலையத்தை மீண்டும் பழைய பகுதிக்கு மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரணவ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் வட்டம் அரவிந்த் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சிலர் தங்கள் வீட்டின் வாசலை சாலை வரை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன், அரவிந்த்நகர்.
அடிப்படை வசதி தேவை
மதுரை மாவட்டம் அனுப்பானடிக்குட்பட்ட மாருதிநகர், கங்காநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, தார்சாலை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி இங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாலும் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திட வேண்டும்.
பொதுமக்கள், அனுப்பானடி.
கூடுதல் இருக்கைகள் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் அமர குறிப்பிட்ட அளவிவே இருக்கைகள் உள்ளன. இதனால் பயணிகள் வெயிலில் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்திற்கு கூடுதல் இருக்கைகள் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
கணேசன், ராமநாதபுரம்.
Related Tags :
Next Story