கடைகள், ஓட்டல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம்-தொழிலாளர் துறை அறிவிப்பு
கடைகள், ஓட்டல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் குறித்து தொழிலாளர் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மதுரை
கடைகள், ஓட்டல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் குறித்து தொழிலாளர் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அகவிலைப்படி
மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியச்சட்டம் 1948-ன் படி, பல்வேறு வகையான தொழில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.04.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு தொழிலாளர் கமிஷனரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை, பல்வேறு தொழில்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்துடன் வழங்க வேண்டும். அத்துடன் புதிய அகவிலைப்படியானது ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்க வேண்டும்.
அதாவது, கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5,507 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.4,698 என மொத்தம் ரூ.10,205 குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்பட வேண்டும். ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பணியாற்றும் சப்ளையர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.6,127 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 என மொத்தம் ரூ.12,835 குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்பட வேண்டும். செக்யூரிட்டி கார்டுகளுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.7,996 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,554 என மொத்தம் ரூ.14,550 குறைந்தபட்ச சம்பளமாக வழங்கப்பட வேண்டும்.
டிரைவர், நடத்துனர்களுக்கு...
பொது மோட்டார் போக்குவரத்து தொழிலில் பணியாற்றும் டிரைவர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.9,118 மற்றும் அகவிலைப்படி ரூ.7,678 என மொத்தம் ரூ.16,796-ம், நடத்துனர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.8,907, அகவிலைப்படி ரூ.7,678 என மொத்தம் ரூ.16,585 வழங்கப்பட வேண்டும். அதேபோல, செங்கல் சூளை, சினிமா தியேட்டர்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அரிசி ஆலை உள்ளிட்ட 72 வகையான தொழில்களில் பணியாற்றுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்துடன் வழங்க வேண்டும்.
அபராதம்
அவ்வாறு வழங்காத மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நிறுவனங்கள் மீது 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மதுரையில் உள்ள தொழிலாளர் இணை கமிஷனர் முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான தொகை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் 10 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story