கொரோனா 4-ம் அலையை தடுக்க தகுதியான அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட வேண்டும்; கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்
கொரோனா 4-வது அலையை தடுக்க தகுதியான அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஈரோடு
கொரோனா 4-வது அலையை தடுக்க தகுதியான அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பு பணியாக தமிழ்நாடு முழுவதும் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் இலவச கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். ஈரோடு மாநகராட்சி இடையன்காட்டு வலசு உயர்நிலைப்பள்ளி, காந்திஜி ரோட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டார்.
விழிப்புணர்வு
பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியில் 2 ஆயிரத்து 316 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். 66 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சம் பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் போடப்படும்.
மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இதுவரை 304 பள்ளிக்கூடங்களில் 20 ஆயிரத்து 103 பேருக்கு போடப்பட்டு உள்ளது. பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வேண்டுகோள்
மாபெரும் தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமன்றி 12 வயது முதல் 14 வயது வரையானவர்கள், 15 வயது முதல் 18 வயது வரையானவர்கள் என்று தகுதியான வயதுடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வரும் நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா 4-ம் அலையை தடுப்பது மட்டுமின்றி தங்கள் இன்னுயிரையும் பாதுகாக்கும் வகையில் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்தார்.
அவருடன் ஈரோடு மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story