ஈரோட்டில் பயங்கரம் கழுத்தை நெரித்து பெண் கொலை; கள்ளக்காதல் தகராறில் நடந்ததா? போலீஸ் விசாரணை


ஈரோட்டில் பயங்கரம் கழுத்தை நெரித்து பெண் கொலை; கள்ளக்காதல் தகராறில் நடந்ததா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 May 2022 3:48 AM IST (Updated: 1 May 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்பத்தகராறு
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பி.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). தனியார் மில்லில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (38). இவர்களுக்கு கோவர்த்தன் (11) என்கிற மகனும், அபிநயா (8) என்கிற மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு சுரேசும், புவனேஸ்வரியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
 சுரேஷ் அவரது சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி குழந்தைகளுடன் ஈ.பி.பி. நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று கோவர்த்தனும், அபிநயாவும் பள்ளிக்கூடத்துக்கு சென்று இருந்தனர். இதனால் புவனேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து புவனேஸ்வரி வெளியே வரவில்லை. அவர் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்ததால், கீழே உள்ள வீட்டில் வசிப்பவர்கள் நேற்று மாலை அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
கொலை
அங்கு புவனேஸ்வரி வாயில் ரத்தம் கசிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், புவனேஸ்வரி மர்மநபர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தது யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளத்தொடர்பு
இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், புவனேஸ்வரியின் வீட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பெயிண்ட் அடிப்பதற்காக வந்து உள்ளார். அப்போது அந்த வாலிபருக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் அவரது கணவர் பிரிந்து சென்று வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் புவனேஸ்வரியின் கணவர் சுரேஷ், பெயிண்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
எனவே விசாரணையின் முடிவில், புவனேஸ்வரியை கொலை செய்தது யார்? கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது கொலைக்கு வேறு ஏதும் காரணம்  உள்ளதா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஈரோட்டில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story