‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 May 2022 3:59 AM IST (Updated: 1 May 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் 

தர்மபுரி ரெயில் நிலைய சாலையில், சேரும் குப்பைகளை கொட்ட சாலையோரத்தில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் கொட்டப்பட்ட குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும். சாலையில் குப்பைகள் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், தர்மபுரி.
====
இருளில் தவிக்கும் மழலையர்கள்

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை மையப்பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டித்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் அங்கன்வாடி மையத்தில் இருட்டு அறையில் தான் மழலையர்கள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்களும் கிடையாது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து, மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஸ்ரீகண்டன், கிருஷ்ணகிரி.
====
மயானத்திற்கு சாலை வசதி வேண்டும்

நாமக்கல் மாவட்டம் தேங்கல்பாளையம் ஆனைப்பட்டியான் காலனியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் இருந்து மயானத்துக்கு செல்ல ரெயில்வே பாலத்தின் கீழே உள்ள பாதையில் தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த பாதையில் கழுத்தளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கழுத்தளவு தண்ணீரில் இறங்கிதான் பிணத்தை எடுத்துசென்று அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், ஆனைப்பட்டியான் காலனி, நாமக்கல்.
===
கம்பி வேலி அமைக்கப்படுமா? 

சேலம் சூரமங்கலம் அடுத்த ஆண்டிப்பட்டியில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மேல்பகுதியில் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு வேலி போடப்பட்டிருந்தது. தற்போது அந்த கம்பிகள் மிகவும் துருப்பிடித்து சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் கிணற்றில் குதித்து குளிக்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாத சிறுவர்கள் அதனை வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாதுகாப்பு வேலி சரிவர இல்லாத அந்த கிணற்றில் சிறுவர்கள் தவறிவிழுந்து உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றுக்கு இரும்பு கம்பி வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், ஆண்டிபட்டி, சேலம்.
===
கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மூங்கில்பாடிக்கு கருப்பூர் வழியாக குறைந்த எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவில் டவுன் பஸ்கள் வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சேலம்-மூங்கில்பாடி கிராமத்திற்கு கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலைச்செல்வி, மூங்கில்பாடி, சேலம்.
====
தாழ்வாக தொங்கும் மின் வயர்கள்

சேலம் மாநகராட்சி 54-வது வார்டு  தர்மலிங்கம் 1-வது தெருவில் மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இப்பகுதியில் உள்ள மரக்கிளைகள் மின் வயர்களின் மீது உரசுவதால் அசம்பாவிதம்  ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. லேசான காற்று அடித்தாலும் வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் மின்வயர்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-கோபால், தாதகாப்பட்டி, சேலம்.

சேலம் தாரமங்கலம் 6-வது வார்டு பாவடி ஆறுமுகம் தெருவில் வீட்டின் அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை உயர்த்தி கட்டி தர வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், 6-வது வார்டு, தாரமங்கலம், சேலம்.
===
மதுப்பிரியர்கள் தொல்லை

எடப்பாடி-பூலாம்பட்டி ரோட்டில் பிரதான குடிநீர் குழாயில், நீர் அழுத்தத்தை குறைக்கும் கோண வடிவ குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்களிடம்,  குறிப்பாக பெண்களிடம் மது அருந்துபவர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பஸ் நிறுத்தமும், வீடுகளும் உள்ளன. இதனால் பொதுமக்கள் மதுப்பிரியர்களால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பூலாம்பட்டி ரோடு, எடப்பாடி.
===
குண்டும், குழியுமான சாலை

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சேந்தமங்கலம் சாலைக்கு செல்ல மேட்டுத்தெரு வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பகவதி அம்மன் கோவில் அருகே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன. எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், நாமக்கல்.

Next Story