குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் கைது
சேலத்தில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
குறைந்த வட்டியில் கடன்
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலர். இவர் கடந்த ஆண்டு ஆன்லைனில் வேலை சம்பந்தமாக தேடி பார்த்து கொண்டிருந்தார். அப்போது வேலை தொடர்பான விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த சசிகுமார் கொண்டையன் (வயது 46) என்பவருடைய செல்போன் எண்ணுக்கு மலர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சசிகுமார் கொண்டையன் தெரிவித்தார்.
இதனிடையே மலர் கொடுத்த தகவல் மூலம் மேலும் 2 பெண்களிடம் அவர் பேசினார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து திடீரென மீண்டும் அவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய சசிகுமார் கொண்டையன் கொரோனா தொற்று காரணமாக வேலை கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், உங்களுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக முன்பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
கைது
இதை நம்பிய மலர் உள்பட 3 பேரும் சேர்ந்து சசிகுமார் கொண்டையனிடம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 971 கொடுத்தனர். ஆனால் அதன்பிறகு சசிகுமார் கொண்டையன் அவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றினார். இந்த மோசடி குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சசிகுமார் கொண்டையன் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளார் என தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சசிகுமார் கொண்டையனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஏ.டி.எம். கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
புகாரை பெற்று உடனடியாக வழக்குப்பதிவு செய்து 3 மணி நேரத்தில் மோசடி நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.
Related Tags :
Next Story