போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற வாலிபர்களை விடுவிக்கக்கோரி மறியல்
போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற வாலிபர்களை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
வாலிபர் மீது தாக்குதல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள், மங்களத்து ஏரி அருகே வாலிபால் விளையாடினர். அப்போது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 2 பேர் போதையில் ஒரு வாலிபரை பிடித்து, கஞ்சா விற்பதாக கூறி, அவரை தாக்கியதாக தெரிகிறது. அந்த வாலிபரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது நண்பர்கள், அவரை தாக்கியவர்களிடம் வாக்குவாதம் செய்து, வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில், அந்த வாலிபரை தாக்கியவர்கள் போலீசார் என்பது தெரியவந்தது. இதையடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் தங்களிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று அந்த வாலிபர்கள் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், கஞ்சா வைத்துள்ளீர்களா? விற்பனை செய்கிறீர்களா? என்று கேட்டு தாக்கியுள்ளனர். மேலும் மற்ற போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்களின் உதவியுடன் 3 வாலிபர்களையும் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வாலிபர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தவறு செய்யாத அந்த வாலிபர்களை உடனடியாக தங்களுடன் அனுப்பாவிட்டால், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார், அந்த வாலிபர்களை அனுப்ப மறுத்ததால் போலீஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதை அறிந்த தண்டலை கிராம மக்களும், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை விடுவித்தனர். மேலும் அவர்களை நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
பெற்றோருடன் அனுப்பினர்
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வாலிபர்கள் மீது தவறில்லை என்று தெரியவந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று போலீஸ் நிலையம் வந்த அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவர்களது பெற்றோருடன் ஜெயங்கொண்டம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட போலீசாரால் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த வாலிபர்களின் பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும்நிலையில், சில போலீசாரின் தவறான அணுகுமுறையால் மற்ற போலீசாருக்கும் கெட்ட பெயர் ஏற்படும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story