சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெற குழுவினர் ஆய்வு


சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெற குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 May 2022 4:07 AM IST (Updated: 1 May 2022 4:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம்:
சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கொலுசுக்கு புவிசார் குறியீடு
சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி கொலுசு சார்ந்த பட்டறைகள் உள்ளன. இந்த தொழிலில் சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால் கொலுசுக்கு உலக அளவில் நல்ல மவுசு உண்டு. அதற்கு காரணம், கைவினை கலைஞர்களால் கலைநயம் மிக்கதாக கொலுசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பாரம்பரிய சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீலும், புவிசார் குறியீடு அதிகாரி சஞ்சய் காந்தி தலைமையிலான குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் செவ்வாய்பேட்டை, பனங்காடு, சிவதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து புவிசார் குறியீடு அதிகாரி சஞ்சய் காந்தி  நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் ஒத்துழைப்புடன்...
சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு தகுதி பெறுவதற்கு தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சேலத்தில் மட்டும் தான் கைவினைஞர்களால் கலை நயத்துடன் கொலுசு உற்பத்தி செய்யப்படுவதால் நிச்சயம் புவிசார் குறியீடு கிடைக்கும். இதற்காக வெள்ளி கட்டியை உருக்குதல், கம்பி கட்டுதல், பாலீஸ் போடுவது, தரம் கணக்கீடு என வெள்ளி கொலுசு முழு வடிவம் எவ்வாறு பெறுகிறது என்பது குறித்து முழுமையாக பார்வையிடப்பட்டது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் சேலம் வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க உள்ளோம். அதன்பிறகு 1 அல்லது 2 ஆண்டுகளில் புவிசார் குறியீடு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் பூபதி, இணை செயலாளர் முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story