சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு கொலையா?-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு கொலையா?-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2022 4:16 AM IST (Updated: 1 May 2022 4:16 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு கொலை செய்யப்பட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:
சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு கொலை செய்யப்பட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூக்கில் தொங்கிய நர்சு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வேலூர் சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 21). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருந்து அங்கு பயிற்சி நர்சாக பணிபுரிந்து வந்தார். 
இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் ஆஸ்பத்திரியில் உள்ள தங்கும் விடுதியில் ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியதாக தெரிகிறது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஊழியர்கள், அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நர்சு ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சாவில் சந்தேகம்
இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, இறந்துபோன ராஜேஸ்வரியின் தாய் பாப்பாத்தி மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சேலத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனிடையே, ராஜேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி அவரது உறவினர்கள் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது, அங்கு வந்த அன்னதானப்பட்டி மற்றும் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் நர்சு ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை நடத்த வேண்டும்
இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாய் பாப்பாத்தி கண்ணீர் மல்க கூறுகையில், கடந்த வாரம் எனது மகள் எனக்கு போன் செய்து பேசினாள். அப்போது, வருகிற 21-ந் தேதி பிறந்தநாள் வருவதாகவும், அதற்காக சில பொருட்களை வாங்கி வைக்குமாறு கேட்டார். நானும் சரி என்று கூறினேன். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை என்னால் நம்பமுடியவில்லை. காதல் பிரச்சினையில் மகள் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. அவரை அடித்து கொலை செய்துவிட்டார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும். மேலும் உடன் வேலை செய்யும் நர்சுகளையும் விசாரணை நடத்தினால் அவரது இறப்புக்கான விவரம் தெரியவரும். எனது மகள் சாவுக்கு உரிய நீதி கிடைக்காமல் அவரது உடலை எடுத்து செல்ல மாட்டோம், என்றார்.

Next Story