சனி ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்


சனி ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 1 May 2022 6:49 PM IST (Updated: 1 May 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

குன்னூர்

சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

ஒரு வழிப்பாதையாக மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 16-ந் தேதி முதல் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதன்படி மேட்டுப்பாளையத்திவிருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லாரி உட்பட கனரக வாகனங்களுக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் இதர வாகனங்கள் மேட்டுப்பாளையம் -குன்னூர் வழியாக அனுமதிக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் ஊட்டி, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

கோரிக்கை

இதனால் டாக்ஸி கட்டணம் உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பொதுமக்கள் மற்றும் லாரி டிரைவர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இதுகுறித்து குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-
கடந்த சீசன் காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் இப்போது சீசன் முடியும் வரை ஒரு வழிப் பாதையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் வெறிச்சோடின

லாரிகளுக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நசிந்த நிலையில் உள்ள லாரி தொழில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தற்போது வார நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வராததால் பகல் நேரத்தில் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை வெறிச்சோடி உள்ளது. 
சீசன் காலம் முழுவதும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதை என்பதை மாற்றி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு வழி பாதையாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story