தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மரியாதை


தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மரியாதை
x
தினத்தந்தி 1 May 2022 10:04 PM IST (Updated: 1 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மே தினத்தையொட்டி தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மே தினத்தையொட்டி தொழிலாளர் நினைவு சின்னத்துக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மே தினம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொழிலாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி வடக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கம் வளாகத்தில் தொழிலாளர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று காலையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மரியாதை
நிகழ்ச்சியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கிராமசபை கூட்டம்
ஏரல் அருகே சிவகளை பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

கிராமம் தத்தெடுப்பு
தி.மு.க. அரசு கடந்த ஆண்டு பதவியேற்றபோது அ.தி.மு.க. அரசு கஜானாவை காலி செய்து வைத்திருந்தது. மேலும் கொரோனா பரவல் அதிகம் இருந்தது. இந்த வேளையில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இதனை எல்லாம் திறம்பட சமாளித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு ஆராய்ச்சி இறுதியில் தமிழர்களின் தொன்மை அறிவியல் பூர்வமாக தெரியவரும். சிவகளையில் பெரும்பாலான மக்கள் விளையாட்டு மைதானம், குடிநீர் இணைப்பு, சாக்கடை கால்வாய் பிரச்சினை, வேலைவாய்ப்பு, தேசிய ஊரக திட்டத்தில் வேலை உள்பட பிரச்சினைகளை கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ. உதவியுடன் நிறைவேற்றி தரப்படும். சிவகளை கிராமத்தை முன்மாதிரியாக மாற்றும் வகையில், இந்த கிராமத்தை தத்தெடுக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் பண்ணை எந்திரங்கள் உள்பட ஏராளமான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கூட்டத்தில் நடந்த மருத்துவ முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், ஆண்றோ, மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அருணாசலம், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஆசிரியர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து துணைத்தலைவர் கைலாசம் நன்றி கூறினார்.

Next Story