‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை கொக்கிரகுளத்தில் இருந்து முருகன்குறிச்சி வரையிலும் சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு பாளையங்கோட்டையை சேர்ந்த அருண் விக்னேஷ் அனுப்பிய பதிவு, நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக சாலையோரம் தேங்கி கிடந்த மண் குவியல் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
உயரமான வேகத்தடையால் விபத்து
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் வழியில் இடைச்சிவிளையை அடுத்து பூச்சிக்காடு பிரிவு என அழைக்கப்படும் குமாரபுரத்தில் வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. குறிப்பாக வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. எனவே அந்த வேகத்தடையின் உயரத்தை குறைக்க வேண்டும். மேலும் அருகே 100 மீட்டர் தொலைவில் சிறிதாக மற்றொரு வேகத்தடை அமைக்க வேண்டும். வேகத்தடை இருப்பது போன்ற எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
விஜயலிங்கம், குஞ்சன்விளை.
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
தரைப்பாலம் சீரமைப்பு
ராதாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர், ராதாபுரம்- வள்ளியூர் மெயின் ரோட்டில் சுப்பிரமணியபேரி பிரிவில் உள்ள தரைப்பாலம் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாகவும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாயில் உடைப்பு
தென்காசி மாவட்டம் கடையத்தில் குடிநீர் தொட்டியின் எதிர்ப்புறம் குடிநீர் குழாய்கள் அமைந்துள்ளது. அதில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் வால்வு பகுதிக்கு முன்னதாகவே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல மாதங்களாக வீணாக செல்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராமர், கடையம்.
ரேஷன் கடை தேவை
சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டிநாடாரூரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னூத்து என்ற ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் ஊரில் ரேஷன் கடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரோக்கிய ரிஷன், ஆண்டிநாடாரூர்.
குண்டும் குழியுமான சாலை
கடையத்தில் இருந்து ராமநதிக்கு அணைக்கு செல்லும் சாலை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் விளைநிலங்களுக்கு விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், வாகனங்களில் செல்பவர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கே.திருக்குமரன், கடையம்.
ஆபத்தான மின்இணைப்பு பெட்டி
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமம் வடக்கு தெருவில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் 77-வது மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின்இணைப்பு பெட்டி துருப்பிடித்து மூடியில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் மின்விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த மின் இணைப்பு பெட்டியை மாற்றுவற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தி, கீழக்கலங்கல்.
ரோடு சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் வடக்கு காரசேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இம்மானுவேல் திடலில் இருந்து தெற்கு தெரு வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முரளி தேவேந்திரா, வடக்கு காரசேரி.
சுகாதாரக்கேடு
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம்.சவேரியார்புரம் அம்மா உணவகம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
வனிதா, எம்.சவேரியார்புரம்.
Related Tags :
Next Story