இடுப்பில் சொருகிய மதுபாட்டில் குத்தி கிழித்ததில் தொழிலாளி சாவு
போதையில் கீழே விழுந்த போது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அருமனை:
போதையில் கீழே விழுந்த போது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இடுப்பில் சொருகினார்
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள தெற்றிவிளையைச் சேர்ந்தவர் ஜான் ஜெயக்குமார் (வயது 40), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
ஜான் ஜெயக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலை முடிந்த பிறகு தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஜான் ஜெயக்குமார் இரவில் மதுகுடித்து விட்டு போதையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தான் குடித்தது போக மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் இடுப்பில் சொருகி வைத்தபடி நடந்து வந்தார்.
மதுபாட்டில் குத்தி சாவு
வீட்டின் அருகில் வந்த போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து ஜான் ஜெயக்குமாரின் வயிற்றில் குத்தி கிழித்தது. இதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்து மயக்க நிலைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஜான் ஜெயக்குமாரின் உறவினர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதுவரைக்கும் உயிருக்கு போராடிய ஜான்ஜெயக்குமாரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜான் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story