உடும்பை வேட்டையாடிய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது


உடும்பை வேட்டையாடிய அண்ணன்,  தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 10:57 PM IST (Updated: 1 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

குமரி வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடிய அண்ணன், தம்பி உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரல்வாய்மொழி:
குமரி வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடிய அண்ணன், தம்பி உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சரகத்துக்கு உட்பட்ட தெற்குமலை காப்புகாட்டின் கிழக்கு பகுதியில் சிலர் உடும்பு வேட்டையாடுவதாக மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் இளையராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பூதப்பாண்டி வனசரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் பழவூர் பகுதியில் மறைந்திருந்து தீவிரமாக கண்காணித்தனர். 
4 பேர் கைது
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் நாய்களுடன் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன்கள் அபிமன்யூ (வயது 24), சாத்யகி மிராஸ் (22), சுயம்பு ராஜா மகன் நவின்ராஜ் (25), ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட்டை சேர்ந்த பொன்னையன் மகன் பாக்கிய ஜெகேஸ் (29) என்பதும், நாய்களை பயன்படுத்தி உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் வேட்டையாடிய 4 உடும்புகள், வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாய்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story