மீண்டும் ஒரு போராட்டத்துக்கு அவசியம் இருக்காது: 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசை நம்புகிறோம் விழுப்புரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


மீண்டும் ஒரு போராட்டத்துக்கு அவசியம் இருக்காது: 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசை நம்புகிறோம் விழுப்புரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 1 May 2022 11:13 PM IST (Updated: 1 May 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசை நம்புகிறோம், மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று விழுப்புரம் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.


விழுப்புரம், 

பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி (மத்தியம்), புகழேந்தி (வடக்கு), பாவாடைராயன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

மக்களின் முடிவு

வருகிற 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி நமது கட்சியில் மறுசீரமைப்பு நடந்து வருகிறது. நமக்குள் சில மாற்றங்களை செய்து வருகிறோம். பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். சுழற்சி முறையில் எல்லோருக்கும் பொறுப்பு வரும். நாம் பொறுப்புக்காக டாக்டர் ராமதாஸ் பின்னால் வரவில்லை, அடித்தட்டு மக்கள் முன்னுக்கு வர டாக்டர் ராமதாஸ் வழியில் நாம் செயல்படுகிறோம்.


ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பா.ம.க. ஆட்சி அமையும். இதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

இன்றைக்கு பாட்டாளி தினம், தொழிலாளர் தினம், இது நம்முடைய தினம். வியர்வையை சிந்தி உழைக்கிற அடித்தட்டு மக்கள் முன்னுக்கு வர 42 ஆண்டு காலமாக டாக்டர் ராமதாஸ் பாடுபட்டு வருகிறார். எனக்கு பதவி ஆசை என்பது நிச்சயம் கிடையாது. நீங்கள் முன்னேற வேண்டும், தமிழகம் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். 

அதிகாரம் வேண்டும்

தற்போது எங்கு பார்த்தாலும் கலாசார சீரழிவுகள். பள்ளி மாணவர்கள் மதுபானம் குடிக்கிறார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுகின்றனர். மாணவர்கள் போதையுடன் பள்ளிக்கு செல்கின்றனர், இதை பார்க்கும்போது இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

நாம் அனைவரும் ஓயாமல் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியல் களம் நமக்காக காத்திருக்கிறது. 2026-ல் நாம் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

இடஒதுக்கீடு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதி பிரச்சினை கிடையாது, இது வளர்ச்சிக்கான பிரச்சினை. தனி இடஒதுக்கீடு வழங்கினால்தானே முன்னுக்கு வர முடியும். தமிழகத்தில் 2 சமுதாயம் பெரிய சமுதாயம், ஒன்று வன்னிய சமுதாயம், மற்றொன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம். இந்த இரு சமுதாய மக்களும் 40 விழுக்காடு உள்ளனர். இந்த இரு சமுதாயமும் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் ஒட்டுமொத்த மாநிலமும் முன்னேறும்.

போராட்டத்திற்கு அவசியம் இருக்காது

நாம் போராடி பெற்ற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 காரணங்களை சொல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது 7 காரணங்களில் 6 காரணங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஒரேயொரு காரணம்தான் அது புள்ளிவிவரம் இல்லை.

 இதுசம்பந்தமாக நாங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளோம். இந்த கல்வியாண்டிற்குள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் சட்டம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம், அதற்கு அவரும் செய்வதாக கூறியிருக்கிறார், நிச்சயம் செய்வார் என்று நம்புகிறோம்.

மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என்று நம்புகிறோம். 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு வரப்போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் அன்புமணி, மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் மணிமாறன், வடக்கு நகர செயலாளர் போஜராஜன், காணை ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜ், மோகன், சிவசக்தி, ஒன்றிய தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், மணிகண்டன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர், கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ஞானவேல், ரமேஷ், ஒன்றிய தலைவர் சுரேஷ், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன்,


 மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகிகள் கோபால், பிரபாகரன், ராஜாராம், அரிகிருஷ்ணன், பாண்டியன், பிரபு, செங்கேணி, ஜீவா, செல்வராஜ், பாண்டியன், தேசிங்கு, செல்வம், கலையரசன், ரங்கநாதன், கிருஷ்ணமூர்த்தி, மின்னல்முருகன், சவுந்தர், தனசேகர், மணி, ராமலிங்கம், வெங்கடேஷ், ராஜா, வினோத், குமார், ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் கிழக்கு நகர செயலாளரும், நகரமன்ற கவுன்சிலருமான இளந்திரையன் நன்றி கூறினார்.

Next Story