எருமப்பட்டி அருகே பரபரப்பு தாய், மகனை கட்டி போட்டு 11 வயது சிறுமி கடத்தல் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எருமப்பட்டி அருகே பரபரப்பு தாய், மகனை கட்டி போட்டு 11 வயது சிறுமி கடத்தல் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே தாய், மகனை கட்டி போட்டு விட்டு 11 வயது சிறுமியை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவுசல்யா (29). இவர்களுக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (11) என்ற மகளும் உள்ளனர். மவுலீசா புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். சரவணன் குடும்பத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக அங்குள்ள ஊராட்சி மன்றம் பின்புறம் முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவுசல்யா, ஜோனின் மற்றும் மவுலீசா ஆகிய 3 பேரும் வீட்டு மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் ஜன்னல் சிலாப் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்றனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மேலும் கவுசல்யா மற்றும் தூங்கி கொண்டிருந்த ஜோனின் வாய்களில் பிளாஸ்டிக் பேண்டேஜ் ஒட்டினர். இதையடுத்து 2 பேரின் கைகளையும் பின்னால் கட்டி போட்டு விட்டு 2 பேரும் சத்தம் போட்டால் மகளை கொன்று விடுவதாக மிரட்டினர்.
மாணவி கடத்தல்
இதையடுத்து சிறுமி மவுலீசாவை மிரட்டி அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர். மேலும் கவுசல்யா அணிந்திருந்த ¾ பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து கவுசல்யா அங்கிருந்த கத்தியை சிரமப்பட்டு எடுத்து, 2 பேர் கைகளில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்ததுடன், வாயில் இருந்த பேண்டேஜை எடுத்து விட்டு சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கவுசல்யா கூறினார்.
இதையடுத்து உடனடியாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை சூப்பிரண்டு சுரேஷ், எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுசல்யா, ேஜானினிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது எருமப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கஸ்தூரிப்பட்டி புதூர் வரை ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் மொட்டை மாடியில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். பணம், சொத்துக்காக சிறுமி கடத்தப்பட்டாரா? அல்லது முன்விரோத தகராறா? வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமியை கடத்தி சென்ற முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தாய், மகனை கட்டி போட்டு விட்டு 11 வயது சிறுமியை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
========
ரூ.50 லட்சம் கேட்டு போனில் மிரட்டிய மர்மநபர்கள்
எருமப்பட்டி அருகே சிறுமியை கடத்திய மர்மநபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றனர். இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு கவுசல்யாவின் சிம் எண்ணில் இருந்து போன் வந்தது. அப்போது போனில் பேசிய மர்மநபர்கள் சிறுமி மவுலீசா உயிருடன் வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுேரஷ், வாட்ஸ்-அப்பில் விழிப்புணர்வு ஆடியோைவ வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story