உளுந்தூர்பேட்டை அருகே 264 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே 264 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
உளுந்தூர்பேட்டை
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் தங்க பெருமாள். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் வேனில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தங்களின் உடமைகள் அடங்கிய 6 பைகளை வேனின் மேற்கூரையில் வைத்து அவற்றை தார்பாயால் போர்த்தி கட்டி வைத்திருந்தனர்.
வழியில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரில் தனியார் ஓட்டலில் வேனை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வேனின் மேற்கூரையில் 264 பவுன் நகைகள் வைத்திருந்த 4 பைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தங்கப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 66 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளியான உசிலம்பட்டியை சோ்ந்த கணேசன் மற்றும் இவருக்கு உறுதுணையாக இருந்த குமரேசன், அஜய், திலீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட கணேசன் நெடுஞ்சாலைகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், முதல் முறையாக கண்காணிப்பு கேமரா அமைந்துள்ள பகுதியில் நின்ற வேனில் நகைகளை கொள்ளையடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story