தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 12:02 AM IST (Updated: 2 May 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள ்குறைகள் பகுதி

வீணாகும் குடிநீர்


  காட்பாடி விருதம்பட்டில் உள்ள அகில இந்திய வானொலி ஒலிபரப்பு நிலையம் முன்பு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையோரம் குட்டைபோல் தேங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -கிருஷ்ணன், காட்பாடி.
  
வேகத்தடை அமைப்பார்களா?

   திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்-தலைவாகுளம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஏர்ப்பாக்கம் கிராமத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்தை தடுக்க ஏர்ப்பாக்கம் கிராமத்தில் சாலையின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைப்பார்களா?
   -அசோக்குமார், ஏர்ப்பாக்கம்.
  
சாலை வசதி வேண்டும்

  
   காட்பாடியில் ரூ.16 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இதனை திறந்து வைத்தார். காட்பாடி ராணுவ கேன்டீன் அருகில் கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்குக்குச் செல்ல சாலை வசதி செய்யப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
   -பி.துரை, கல்புதூர்.
  
பாதாள சாக்கடை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் 

  
  அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் அங்குள்ள பள்ளி அருகே பிரதான சாலையின் நடுவில் பாதாள சாக்கடை ‘மேன்ஹோல்’ சாலை மட்டத்திற்கு இல்லாமல் பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாக உள்ளது. மேலும் பஜார் பகுதி காந்தி ரோடு முதல் திருத்தணி சாலை ஜெய் பீம் நகர் வரையில் இது போன்று பாதாள சாக்கடையின் ‘மேன்ஹோல்’ பள்ளம் சரி செய்யாமலேயே உள்ளது. அவ்வழியாக பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சாதிக் பாட்ஷா, அரக்கோணம்.
  
தகவல் தெரிவிக்க வேண்டும்

  
  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. ஆனால் கிராமசபை கூட்டம் நடப்பது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரியவில்லை. இதனால் அவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் போனது. இனி வருங்காலங்களில் கிராமசபை கூட்டம் நடப்பது பற்றி முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  -எம்.காமராஜ், வாணியம்பாடி.
  
கால்வாய்கள் தூர்வாரப்படுமா?


   வேலூர் மாநகராட்சி வார்டு எண்-42 கஸ்பா சப்ரகார தெருவில் குப்ைபகளை ஊழியர்கள் சரியாக அகற்றுவது இல்லை. கழிவுநீர் கால்வாய்களை சரியாக தூர்வாருவது இல்லை. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   -எம்.ராஜ்பாபு பானுநந்தினி, வேலூர்.
  
கால்வாய் மேல் மூடி அமைக்க வேண்டும்

  
   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராஜாஜி தெரு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும். கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
   -ஆட்டோ க.முத்து, போளூர்.
  
பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள் 

  
  காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ்நிறுத்தம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும், பாஸ்புக்கில் பதிவு செய்யவும் வந்து செல்கிறார்கள். இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் எப்போதும் நாய்கள் படுத்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் உள்ளே வர அச்சப்படுகிறார்கள். எனவே ஏ.டி.எம். மையத்துக்குள் நாய்கள் வருவதைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -குமார், காட்பாடி.
  


Next Story