மே தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
மே தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பென்னாகரம்:
மே தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா தலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மே தின விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.
அலைமோதிய கூட்டம்
பின்னர் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம், அருவி பகுதிகளில் கூட்டம் அலை மோதியது.
இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது. கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் நடைபாதையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். மேலும் மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்ததால் அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே சாலை ஓரம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
Related Tags :
Next Story