கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் ஆய்வு


கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில்  கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 2 May 2022 1:59 AM IST (Updated: 2 May 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் உணவுகள், சுகாதார வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

கும்பகோணம்:
கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் உணவுகள், சுகாதார வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 
மாணவிகள் விடுதி 
கும்பகோணம் அரசு பெண்கள் தன்னாட்சி கலைக்கல்லூரியில் 5 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிற்படுத்தப்பட்ட மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 4 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். மாணவிகள் தங்கி படிக்க வசதியாக பெண்கள் கல்லூரிக்கு  மிகபிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மகளிர் விடுதி 1, பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி விடுதி 2, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவிகள் விடுதி மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி என 4 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவிகள் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.கோரிக்கை
இந்தநிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகளுக்கான 2 விடுதிகளிலும் 80 மாணவிகள் மட்டுமே தங்கி படிப்பதற்கு தேவையான வசதி உள்ளது. இதனால் ஏராளமான மாணவிகளுக்கு விடுதியில் இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால் 100 மாணவிகள் தங்கும் வசதிகளுடன் புதிய தங்கும் விடுதி கட்டித்தரவேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோட்டாட்சியர் ஆய்வு 
அதன்படி கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, அரசினர் மகளிர் கல்லூரி பிற்பட்டோர் நல மாணவிகள் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி மாணவிகளிடம் அடிப்படை வசதிகள், உணவு முறைகள், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும் விடுதி காப்பாளர் கிரேஸ், சமையலர் அமுதாதேவி ஆகியோரிடம் மாணவிகளுக்கு உணவு வழங்கும் முறைகள் குறித்தும், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் மளிகைபொருட்கள், காய்கறிகளின் தரத்தை ஆய்வு செய்தார். 
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உணவுகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story