விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் துறை அறிவித்து உள்ளது.
மதுரை,
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் வழிகாட்டுதலின்படி, மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டல ஆட்சி எல்லைக்குட்பட்ட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மூலம் மே தின விடுமுறை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அன்றைய தினத்தில் வேலை செய்தால், வேறு ஒரு தினத்தில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்து, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் போது இந்த சட்ட விதிகளை அனுசரித்து அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 156 கடைகள், நிறுவனங்கள், 134 உணவு நிறுவனங்கள், 13 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 303 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே தினத்தில் வேலை அளிப்பவர்கள் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுமுறை அளித்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படும் என மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story