மே தின கிராமசபை கூட்டம்


மே தின கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 2:19 AM IST (Updated: 2 May 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே நடந்த மே தின கிராமசபை கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சை அருகே நடந்த மே தின கிராமசபை கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்றனர்.
கிராமசபை கூட்டம்
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தின கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். படிப்பகம் அமைக்க வேண்டும். பிள்ளையார்பட்டி மெயின்ரோட்டில் 5 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். குளத்தை நிரப்ப கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராமமக்கள் தெரிவித்தனர்.
பொருளாதார வளர்ச்சி
பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசும்போது, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும். நகரப்பகுதியும், கிராமப்பகுதியும் இணைந்துவிட்டது. ஆனால் நகரப்பகுதியில் உள்ள பொருளாதார வளர்ச்சியை இன்னும் கிராமப்பகுதி பெறவில்லை.
பெண்கள் பொருளாதார வளர்ச்சி அடைந்தால் நாட்டில் சமூகம் பொருளாதார வளர்ச்சி பெற்றதாக அர்த்தம். பெண்கள் பொருளாதார வளர்ச்சி பெற அவர்கள் கல்வி கற்க வேண்டும். பல்வேறு துறைகளில் பணிபுரியும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்தந்த துறைகளின் மூலம் ஊருக்கு உதவிகளை பெற்று தர வேண்டும். இந்த கூட்டத்தில் தெரிவித்த குறைகள் அடுத்த கூட்டத்திற்குள் நிவர்த்தி செய்ய ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மோகன், தாசில்தார் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story