தமிழகத்தில் 2026-ல் பா.ம.க. ஆட்சி செய்யும்
தமிழகத்தில் 2026-ல் பா.ம.க. ஆட்சி செய்யும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்வாணன், மாநில துணை தலைவர் கே.பி.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.காசாம்புபூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
அரசியல் களம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் ராமதாஸ் பல போராட்டங்களை நடத்தி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து தந்துள்ளார்.
பா.ம.க.வில் உள்ள இளைஞர்களை போல் வேறு எந்த கட்சியிலும் இல்லை. தற்போது அரசியல் களம் நமக்கு ஏற்ப உள்ளது. 42 ஆண்டு காலமாக பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் வழி நடத்தி வருகிறார். அவரைப்போல் மற்ற கட்சியில் வழி நடத்த திறமையானவர்கள் இல்லை. மக்கள் பிரச்சினையாக இருக்கட்டும், மாணவர்கள் பிரச்சினையாக இருக்கட்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதன் முதலில் டாக்டர் ராமதாஸ் தான் அறிக்கை விடுவார்.
ஆட்சியை பிடிப்பதற்கான நேரம்
பா.ம.க. தொடங்கி 32 ஆண்டு காலம் முடிந்து வருகிற ஜூலை மாதத்தில் 33-வது ஆண்டு தொடங்குகிறது. நம்மிடம் தொலைநோக்கு திட்டம், திறமை உள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
எனவே இளைஞர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்னும் ஒரு மாதத்தில் பா.ம.க. கொடி பறக்க வேண்டும். நான் கிராமம் கிராமமாக வருவேன். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி இளைய நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றிட வேண்டும்.
2026-ல் பா.ம.க. ஆட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆண்டு காலம் 2 கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. மக்கள் வாழ்க்கை முன்னேறவில்லை. இந்தியாவிலேயே பா.ம.க. தான் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடும் ஒரே கட்சியாகும். நிஜமான நிதி நிலை அறிக்கையை 2026-ல் கோட்டையில் பதவியேற்றவுடன் வெளியிடுவோம். பா.ம.க.விடம் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் தமிழ் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.
எனவே பா.ம.க.வினர் 4 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாருமே எதிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் 2026-ல் பா.ம.க ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.ராமு, வடிவேல், அமுதமொழி, சமூக நீதி பேரவை மாநில துணை தலைவர் சிவராமன், மாநில முன்னாள் துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட முன்னாள் தலைவர் பப்லு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவேல், தலைவர் கிருஷ்ணன், மாநில துணைதலைவர் நாராயணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தவஞானம், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட முன்னாள் செயலாளர் சரவணன், சின்னசேலம் வன்னியர் சங்க தலைவர் பேட்டரிவெங்கடேசன், நகர தலைவர் சரவணன், மாவட்ட துணைசெயலாளர்கள் குமரேசன், ஏழுமலை விஜயராஜ், சூர்யா, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், எஸ்.கே.ராஜ்குமார், செந்தில், பாண்டின், ரவிக்குமார், அழகேசன், பிரவின்குமார், அரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலசக்தி, முன்னாள் மாவட்ட நிர்வாகி அ.ப.செழியன், நகர செயலாளர் சண்முகம், விஸ்வநாதன், நாராயணன், அண்ணாதுரை, மணி, ஊடகப்பிரிவு விக்னேஷ், பேரங்கியூர் பிரவீன், இளையராஜா, பாலமுருகன், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் அறிவழகன், முருகன், பாண்டியன், நேரு, பழனி, ராஜா, கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story