‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 3:27 AM IST (Updated: 2 May 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த கொல்லப்பள்ளி, காசிரிகானப்பள்ளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவரனபள்ளி வரை தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த தார்சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல கூட அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வரவேண்டும்.
-ஊர்மக்கள், கொல்லப்பள்ளி, கிருஷ்ணகிரி.
===
கான்கிரீட் சிலாப்புகள் சேதம்

தர்மபுரியில் சேலம் சாலையில் இருந்து பிடமனேரி செல்லும் ரோடு பிரியும் இடத்தின் அருகே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதன் மீது கான்கிரீட் சிலாப்புகளை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளதால், மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் மீது கல்லை வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கல்லை அகற்றி பள்ளம் உள்ள பகுதியில் கான்கிரீட் சிலாப்பை சீரமைக்க வேண்டும்.
-மகேஸ்வரன், தர்மபுரி.
===
பாதியில் நிற்கும் பாலம் அமைக்கும் பணி

சேலம் செரி ரோட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பகுதியிலிருந்து தொங்கும் பூங்கா அம்பேத்கர் சிலை வரை ரெயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாலம் அமைக்கும் பணி அடிக்கடி தடைபட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் காற்று வீசும் போது புழுதிகள் அதிக அளவில் கிளம்புவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியில் உள்ள பிரச்சினைகளை களைந்து, கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், செரி ரோடு, சேலம்.
====
சாலை சீரமைக்கப்படுமா?

சேலம் ராஜாராம் நகரில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் மழை பெய்யும் போது கழிவு நீருடன் மழைநீர் கலந்து சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு  மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் காணப்படும் தார் சாலையை சீரமைத்து கொடுக்கவேண்டும்.
-நாகராஜ், ராஜாராம் நகர், சேலம்.
===
நோய் பரவும் அபாயம்

சேலம் டவுன் வாசவி மகால் பின்புறம் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளிறேும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மார்க்கெட் வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை தூர் வார  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம்,  4 ரோடு, சேலம்.
===

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மூங்கில்பாடிக்கு கருப்பூர் வழியாக குறைந்த எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவில் டவுன் பஸ்கள் சரியாக வருவதில்லை. போதிய அளவில் பஸ்கள் இல்லாததால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேலம்-மூங்கில்பாடி கிராமத்திற்கு கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைச்செல்வி, மூங்கில்பாடி, சேலம்.
===
குண்டும், குழியுமான சாலை

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சேந்தமங்கலம் சாலைக்கு செல்ல மேட்டுத்தெரு வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பகவதி அம்மன் கோவில் அருகே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன. எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், நாமக்கல்.
===

Next Story