அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை மின்னல் தாக்கி குடிசை தீப்பிடித்தது; சிலிண்டர் வெடித்து சிதறியது


அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை மின்னல் தாக்கி குடிசை தீப்பிடித்தது; சிலிண்டர் வெடித்து சிதறியது
x
தினத்தந்தி 2 May 2022 4:04 AM IST (Updated: 2 May 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தபோது மின்னல் தாக்கி குடிசை தீப்பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடித்து சிதறியது.

ஈரோடு
அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தபோது மின்னல் தாக்கி குடிசை தீப்பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடித்து சிதறியது. 
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி வரை இடி-மின்னலுடன் மழை பெய்தது. பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சித்தார் பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பொங்கவாலிகரடு பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீப்பொறி அவரது குடிசை வீட்டிலும் பட்டது. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் டமார் என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீ வீட்டு் முன்பு தென்னங்கீற்றால் ேவயப்பட்டு இருந்த கொட்டகையிலும் பிடித்து எரிந்தது.
குடிசை எரிந்து சாம்பல்
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் குடிசை மீது பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. கொட்டகையில் இருந்த வளர்ப்பு நாய் தீயில் கருகி இறந்தது. அதில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம், 15 யூரியா உர மூட்டைகள் எரிந்து நாசம் ஆனது. அர்ச்சுனன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மரம் சாய்ந்தது
அதேபோல் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சித்தார் பாலத்தின் அருகே உள்ள ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் மேட்டூர்-பவானி ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பூதப்பாடி சந்தைப் பகுதியில் தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. அதன் காரணமாக பூதப்பாடி சிங்கம்பேட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று மதியத்துக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. ஆலங்கட்டி மழையும் பெய்தது. எண்ணமங்கலம் அருகே மூங்கில்பாளையத்தில் உள்ள மாரசாமி என்பவரது 5 தென்னை மரங்கள் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது.
சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் பறந்தது. சில வீடுகளில் போடப்பட்டிருந்த கூரைகளும் காற்றில் பறந்தன. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சூறாவளிக்காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுமார் 5 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்ததால் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது.  இதேபோல் கோபி, கவுந்தப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சூறாவளிக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Next Story