ஆட்டுச்சந்தை பகுதியில் இறந்து கிடந்த ஐ.டி. நிறுவன ஊழியர்
ஆட்டுச்சந்தை பகுதியில் ஐ.டி. நிறுவன ஊழியர் இறந்து கிடந்தார்.
சமயபுரம்:
தஞ்சாவூர் பழனியப்பா நகரை சேர்ந்த குசலவனின் மகன் வினோத்(வயது 35). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் காருண்யா நகரைச் சேர்ந்த சிற்றரசுவின் மகளான சூரியதர்ஷினி(29) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவிய காலத்தில், தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து வினோத் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு சூரியதர்ஷினிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சூரியதர்ஷினி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தை வினோத்தால் தாங்க முடியவில்லை. மேலும் அடுத்த சில நாட்களிலேயே வினோத்தின் தாயாரும் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த நிலையில் இருந்த வினோத் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் ஆட்டுச்சந்தை பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, வினோத்தின் கையில் ‘இன்பார்ம்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அவருடைய மாமனாரின் செல்போன் எண் குறிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்துள்ளனர். மேலும் வினோத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வினோத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி பாலமுருகன்(30) சமயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி இறந்த துக்கம் காரணமாக வினோத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story