ராணிப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப் போட்டு தற்கொலை
ராணிப்பேட்டையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மனைவி பிரிந்து சென்றார்
ராணிப்பேட்டை நகராட்சி, காரை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் சரிசெய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி (55). இவர் மாவு அரைக்கும் இயந்திரம் வைத்து மாவு அரைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் என்ற 2 மகன்கள் உண்டு. இதில் விக்னேஷ் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரேமசுக்கும் கொளத்தூரை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லோகிதா (3) என்ற மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
ரமேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதில் இருந்து விடுபட, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சற்று மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்த ரமேஷ் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தூங்கசென்ற ரமேஷ் வீட்டில் உள்ள முன்பக்க அறையில் அதிகாலை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகன் தூக்குப் போட்டுக்கொண்டதை பார்த்த அவரது தந்தை பன்னீர்செல்வம், தாய் குணசுந்தரி ஆகியோர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர். மகன் இறந்துவிட்டதை பார்த்த அவர்கள் தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பெற்றோரும் உயிரை மாய்த்தனர்
அதன்படி மகனின் உடலை இறக்கி வைத்து விட்டு அதே கயிற்றில் பக்கத்து அறையில் தாய் குணசுந்தரியும், தந்தை பன்னீர்செல்வம் புடவையிலும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடலுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story