தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து விடுவதாக ‘லிப்ட்’ ஆபரேட்டர் தற்கொலை மிரட்டல்


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து விடுவதாக ‘லிப்ட்’ ஆபரேட்டர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 2 May 2022 5:31 PM IST (Updated: 2 May 2022 5:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து விடுவதாக ‘லிப்ட்’ ஆபரேட்டர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி:

 ‘லிப்ட்’ ஆபரேட்டர்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் ஏஜென்சி மூலம் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பிரசவ வார்டு கட்டிடத்தில், ‘லிப்ட்’ ஆப்ரேட்டராக செல்வராஜ் (வயது 37) என்ற மாற்றுத்திறனாளி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு பணியாளர்கள் சிலர் தொல்லை கொடுத்ததாகவும், அவரை பணிமாற்றம் செய்ததாகவும் தெரிகிறது. மேலும் வேலைக்கு வந்த செல்வராஜிடம் கடந்த 3 நாட்களாக வருகைபதிவேட்டில் கையெழுத்து வாங்கவில்லை. 

இதனால் மனமுடைந்த செல்வராஜ், இன்று பிரசவ வார்டு கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏறினார். பின்னர் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 தர்ணாவில் ஈடுபட முயற்சி

இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் இதர பணியாளர்கள் அவரை கீழே இறங்கி வரும்படி கூச்சலிட்டனர். எனினும் அவர் கீழே இறங்கி வரவில்லை. அப்போது சில பணியாளர்கள் லாவகமாக மாடிக்கு சென்று செல்வராஜை பத்திரமாக மீட்டனர். 
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் பாலாஜிநாதன், தற்கொலைக்கு முயன்ற செல்வராஜை அழைத்து விசாரணை நடத்தினர். 
அப்போது அங்கு வந்த ஒப்பந்த பணியாளர்கள், தங்களை மேற்பார்வையாளர்கள் சிலர் ஒருமையில் பேசுவதாகவும், பிடிக்காத நபர்களை பணிமாற்றம் செய்வதாகவும், ஒப்பந்த பணியாளர்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் அடுக்கடுக்கான புகார்களை கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 
இதைத்தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். 

குறைகளை தீர்க்க குழு

இதுகுறித்து மருத்துவ கல்லூரி ‘டீன்’ டாக்டர் பாலாஜிநாதன் கூறுகையில், இனிவரும் காலங்களில் ஒப்பந்த பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எனது தலைமையில் 8 பேர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தனியாக ‘வாட்ஸ்-அப்’ குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒப்பந்த பணியாளர்கள் தங்கள் குறைகளை நேரடியாக பதிவிடலாம். அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். தற்கொலைக்கு முயன்ற ஒப்பந்த பணியாளருக்கு ‘கவுன்சிலிங்’ அளித்து மீண்டும் அதே பணியிடத்தில் அவரை பணியமர்த்த முடிவு செய்துள்ளோம். ஒப்பந்த பணியாளர்கள் புகார் செய்த 3 மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.


Next Story