தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கந்துவட்டி கொடுமையால் சிவசேனா கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் சிவசேனா கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தீக்குளிக்க முயற்சி
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). இவர், சிவசேனா கட்சியின் தேனி மாவட்ட பொருளாளராக உள்ளார். இன்று காலை இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் எடுத்து வந்தார்.
பின்னர் அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்று கொண்டு, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.
கந்துவட்டி
இதையடுத்து தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "நான் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினேன். அதற்கு தினமும் ரூ.100 வட்டியாக கட்டவேண்டும் என்று கூறினார்கள்.
அதன்படி 50 நாட்கள் வட்டி கட்டினேன். கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக என்னால் தொடர்ந்து வட்டியை கட்ட முடியவில்லை. இதனால் வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அதை நான் கட்டி விடுகிறேன் என்று கூறினேன்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் எனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனாலும் எனது ஆட்டோவை மீட்டு கொடுக்கவில்லை. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி கொடுமையால் நான் தீக்குளிக்க முயன்றேன்" என்றார்.
இதையடுத்து அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த சம்பவம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story