வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தற்காலிக கடைகளுக்கு சான்றிதழ் கட்டாயம் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு தற்காலிக கடைகள் அமைக்க உணவு பாதுகாப்பு துறையில் கட்டாயம் சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
சித்திரை திருவிழா
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக சித்திரை திருவிழா நடக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் சித்திரை திருவிழா வருகிற 10-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.
இந்த திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவிழாவின் போது தற்காலிக கடைகளை முறைப்படுத்த வேண்டும். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். தற்காலிக கடைகளுக்கு உணவு தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தற்காலிக சான்றிதழ் வழங்க வேண்டும். கடைகள் அமைப்பவர்கள் இந்த சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மின்சாரம் பாயாத பொருட்கள்
தற்காலிக கடைகள் அனைத்தும் தீப்பற்றாத வகையில் அமைக்கப்பட வேண்டும். உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற கடைகளில் அடுப்புகள் பயன்படுத்தக்கூடாது. தற்காலிக கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் அனைத்தும் மின் ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுவதை உணவு பாதுகாப்பு அலுவலர் தினமும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
தேரின் எடைக்கு தகுந்தவாறு மின்சாரம் பாயாத பொருட்களை கொண்டு தேரின் வடம் தயார் செய்ய வேண்டும். தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையை தாங்கும் வகையில் அமைக்க வேண்டும். பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் முதல் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் இடம் வரை பாதுகாப்பு பணியில் அதிக எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் 24 மணி நேரமும் நிறுத்தி தேவையான மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும். கோவில் அருகில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதுபோல், வீரபாண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவில் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் திடல் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story