போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் எனக்கு தொடர்பா?; மந்திரி அஸ்வத் நாராயண் ஆவேசம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மந்திரி அஸ்வத் நாராயண் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
புகழுக்கு களங்கம்
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தன் மீதான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்த புகாருக்கு பதிலளித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் ஒருவருக்கு கூட நான் உதவி செய்யவில்லை. தர்ஷன்கவுடா யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால் சதீஸ் எனது சகோதரர் என்பது உண்மை தான். ஆனால் என் மீது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி குற்றம்சாட்டுவது சரியல்ல. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அக்கட்சி வெளியிட வேண்டும். எனது இந்த புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று சதி செய்கிறார்கள்.
மக்கள் ஏற்கவில்லை
சமுதாயத்தில் வேரூன்றி உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். எனது அரசியல் வாழ்க்கை வெளிப்படைத்தன்மையாக உள்ளது. டி.கே.சிவக்குமார் குடும்பத்தினரை ராமநகர் மாவட்ட மக்கள் ஏற்கவில்லை. அவர்களுக்கு கனகபுராவில் மட்டும் செல்வாக்கு உள்ளது.
நான் எதிர்காலத்தில் முதல்-மந்திரி ஆவேன் என்று கருதி இவ்வாறு அவர்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். என் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறும் காங்கிரசார் மற்றும் டி.கே.சிவக்குமாரை விட மாட்டேன். அவர் செய்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன்.
எங்கள் குடும்பம்
டி.கே.சிவக்குமார் குடும்பத்தை போல் எங்கள் குடும்பம் அல்ல. என் மீது களங்கத்தை ஏற்படுத்த 100 பேர் முயற்சி செய்தாலும் அது சாத்தியமில்லை. எனக்கு யாருடனும் தொடர்பு கிடையாது. எனது சகோதரருக்கும், முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story